மின்சாரம் தாக்கி தலைமை செயலக ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சூளை சாலைத் தெருவில் முரளி கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தித் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டு வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடந்துள்ளது. இந்நிலையில் முரளிகிருஷ்ணன் தேங்கி கிடந்த மழை நீரில் நடந்து செல்லும் போது எதிர்பாராதவிதமாக வழுக்கி கீழே விழுந்து விட்டார். அதன் பிறகு அருகில் இருந்த இரும்பு கதவை பிடித்து முரளி கிருஷ்ணன் எழுந்திருக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது மின் பெட்டியிலிருந்து வீட்டிற்குள் செல்லும் மின் வயர் இரும்பு கதவில் உரசியபடி இருந்ததால் கதவில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அதனை பிடித்தவுடன் முரளி கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த முரளி கிருஷ்ணனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முரளி கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.