மகாத்மா காந்திக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி கைது செய்யப்பட்ட துறவி காளிசரண் மகாராஜ் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மகாத்மா காந்தியை அவதூறாக பேசிய இந்து சமயத் துறவி காளிசரணை ஜனவரி 13-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீது ஐபிசி பிரிவுகள் 505(2) மற்றும் 294 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட 4 நாட்களுக்கு பின்னர் அண்டை மாநிலமான மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ராய்ப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இருந்தபோதிலும் 2 நாட்கள் முடிவதற்குள் அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் இந்த முறை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். முன்னதாக ராய்ப்பூரில் நடைபெற்ற தரம் சன்சாத் நிகழ்ச்சியில் உரையாற்ற அழைக்கப்பட்ட காளிசரண் மகராஜ், மகாத்மா காந்தியை குறைத்து, அவரை கொன்றதற்காக நாதுராம் கோட்சேவைப் பாராட்டினார்.
பாகிஸ்தான் வங்கதேசம் போன்ற நாடுகளில் அரசியல் மூலம் கைப்பற்ற இஸ்லாமியர்களுக்கு உதவியவர் காந்தி என்று அவர் கூறினார். இஸ்லாம் அரசியல் மூலம் தேசத்தை கைப்பற்றியது. அவர்கள் நம் கண்முன்னாலேயே பாகிஸ்தானையும் வங்க தேசத்தையும் கைப்பற்றினார்கள். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அனைத்தையும் அழித்தார். அவரைக் கொன்ற நாதுராம் கோட்சே வுக்கு எனது வணக்கங்கள் என்று காளீசரண் மகாராஜ் கூறினார்.