தேனி மாவட்டம் முழுவதும் வீடுதோறும் தேசியக்கொடி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடு வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய கொடியை ஏற்றுவதற்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கம்பம் அருகே இருக்கும் குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வீடு வீடாகச் சென்று தேசிய கொடியை மக்களுக்கு வழங்கினார். மேலும் தேசிய கொடியை வீடுகளில் ஏற்ற வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இதுபோல மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேசியக்கொடி வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.