சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் கொண்டே தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சாதிய பாகுபாடு காரணமாக ஒரு சில கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சனை ஏற்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.
எனவே நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் அவற்றின் தலைவர்கள் கொடி ஏற்றுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு கூறு -17 படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு அதன் எந்த வடிவத்திலும் செயல்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை கருத்தில் கொண்டு வரும் சுதந்திர தின விழாவில் எந்த சாதிய பாகுபாடும் இன்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.