பீகார்மாநிலம் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். இவர் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவார் எனவும் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் வாயிலாக அவர் தேசிய அரசியலுக்கு செல்வார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ்குமாரிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது, “நான் தேசிய அரசியலுக்கு போவதாக வெளியாகும் யூகங்கள் அனைத்தும் எந்த அடிப்படை ஆதாரமும் அற்றவை ஆகும்.
பா.ஜனதா கூட்டணியிலுள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் நன்றாக ஒருங்கிணைந்து இயங்கி வருகிறது. என் பழைய தொகுதியின் மக்களையும், நாலந்தா மாவட்ட மக்களையும் நேரில் சந்திக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எனினும் கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளிப்போய் விட்டது. சென்ற சில தினங்களாக அவர்களை பார்த்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. நான் பீகார் மக்களுக்காக பணிபுரிந்து வருகிறேன். இது சாதாரண உரையாடல் மட்டுமே, இதற்கு வேறு எந்த அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.
கங்கையை தூய்மைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். அதற்கு பல முதலீடும், நிறைய கால அவகாசமும் தேவைப்படும். இதற்கிடையில் கங்கைநீரை சில மாவட்டங்களுக்கு குடிநீராக அனுப்பும் திட்டம் விரைவில் முடிக்கப்படும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களின் சுமையை குறைக்க சில மாதங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தோம். ஆனால் தற்போதுள்ள நிதிநிலைமையில் மீண்டும் வரியை குறைக்க முடியாது. வருகிற நாட்களில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சீராகும் என நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.