ஆங்கிலத்திற்கு மாறாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தேசிய அளவில் இந்தி எதிர்ப்பு டிரெண்ட் ஆகியுள்ளது.
டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். நாட்டின் ஆட்சி மொழியை அலுவல் மொழி என பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய அளவிலான டிவிட்டர் டிரெண்டிங்கில் #stopHindilmposition என்பதே டாப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. நாடாளுமன்ற அலுவல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை நாட்டின் ஒருமைப்பாடு மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று கூறினார். அதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விலைவாசி உயர்வை திசை திருப்பும் முயற்சியாக இந்த விவகாரத்தை கையில் எடுப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றன.