தேசிய நீச்சல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.
தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சார்பாக சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் சீனியர் தேசிய நீச்சல் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அந்த போட்டியில் மதுரையை சேர்ந்த நீச்சல் வீரர் மணிகண்டன் 100 மீட்டர் ப்ரிஸ்டையில், பேக் ஸ்டாக்கில் தங்கம், 50 மீட்டர் ப்ரிஸ்டையில் வெள்ளி ஆகிய மூன்று பதக்கங்களை வென்றார். பிரகாஷ் 50 மீட்டர் ப்ரஸ்டோக் தங்கம், 50 மீட்டர் பேக் ஸ்டோக் வெள்ளி, 50 மீட்டர் ப்ரிஸ்டையில் வெள்ளி என மூன்று பதக்கங்களை வென்றார். நவநீதகிருஷ்ணன் 50 மீட்டர் பேக் ஸ்டோக்கில், 100 மீட்டர் ப்ரிஸ்டையில் தங்கம் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்றார்.
இதனால் 3 பேரும் தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் வருகிற 13-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை அசாம் மாநிலம் கவுகாத்தியில் நீச்சல் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மண்டல முதுநிலை மேலாளர் பியூலாஜானி சுசிலா, மாவட்ட விளையாட்டு அதிகாரி, விளையாட்டு விடுதி மேலாளர் ஆகியோர் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.