வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பேருந்துகளை நிறுத்த கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
வேலூர் மாவட்டத்தில் உள்ள கிரீன் சர்க்கிள் அருகே இருக்கும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றியும் இறக்கியும் செல்வதால் எதிர்பாராத விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியனுக்கு புகார்கள் அதிகம் வந்திருக்கின்றது.
இதனால் ஆட்சியர் சாலை பாதுகாப்பு கூட்டத்தொடரில் தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தேசிய நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சாலை பாதுகாப்பு அலுவலர் பிரகாஷ், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
மேலும் நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி சாலை பாதுகாப்பு மேலாளர் ஜஸ்டின் சாம்சன், வேலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார்கள். இதையடுத்து அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்துகள், கனரக வாகன ஓட்டிகளிடம் நெடுஞ்சாலை ஓரமாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட விழிப்புணர்வு இரும்பு பலகை அங்கே வைக்கப்பட்டது.