தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ஜனவரி 25-ஆம் தேதி கொண்டாடப்படும் வாக்காளர் தினம் பற்றிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 100 சதவீதம் பதிவு, வாக்காளர் உதவி தொலைபேசி செயலி, தூண்டுதல் இல்லாத வாக்கு பதிவு மற்றும் வாக்காளராக எனது பங்களிப்பு போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த போட்டிகளில் மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சுவரொட்டி தயாரித்தல், ஓவியம் முழுக்க வாசகம் ஏற்படுத்துதல், இரண்டிலிருந்து மூன்று நிமிடம் பாட்டு படித்தல், வீடியோ பதிவு, குழு நடனம் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும், முதல் 15 இடம்பிடிக்கும் மாணவ மாணவியர்களின் படைப்புகள் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.இந்தப் போட்டியை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வருகிற 24-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதில் பங்கேற்க முடியாத மாணவ மாணவிகள் தேவகோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தங்களின் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.