திருச்சி விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “2 நாட்களாக தமிழ்நாடு முழுதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கிற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது.
இத்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து உடனே கைது செய்யவேண்டும். இந்த செயல்களில் யார் ஈடுபட்டு இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசிடம் கேட்டுக்கொள்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதுமே என்.ஐ.ஏ. சோதனையானது நடந்தது. அச்சோதனையில் தேசத்துக்கு எதிராக, இந்த நாட்டினுடைய பாதுகாப்புக்கு எதிராக இருக்கிற பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
எனினும் தி.மு.க செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் என்.ஐ.ஏ.வை தவறுதலாக பயன்படுத்தியதாக கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். தி.மு.க தேசப் பாதுகாப்பில் விளையாடக் கூடாது. தேசத்தின் பாதுகாப்பு, நாட்டினுடைய பாதுகாப்பு பற்றி நாட்டின் ஏஜென்சிகளின் அளித்த ஆதாரங்களை கொண்டு விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்திருக்கின்றனர். அவர்கள் பல வகையயன ஆதாரங்களை கைப்பற்றி இருக்கின்றனர்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தி.மு.க ஒரு தவறான வாக்கு வங்கி அரசியலை செய்யக் கூடாது. தேச பாதுகாப்பு முக்கியம் ஆகும். பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்களை சேர்ந்த சகோதரர்கள் மீது நடக்கிற தாக்குதல் மீது தமிழக காவல் துறை உடனே நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும்” என்று கூறினார்.