ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பூம்பிடாகை ஊராட்சி மன்ற தலைவராக நிரஞ்சனா(31) என்பவர் உள்ளார். இவருக்கு பெரியசாமி(40) என்ற கணவர் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்ற பெரியசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வயல்பகுதியில் பெரியசாமியின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெரியசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெரியசாமி எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.