வாலிபர் கல்லால் அடித்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எம்.கே புரம் மெயின் ரோடு பகுதியில் கொத்தனாரான அக்னிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குளித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்ற அக்னிராஜ் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையின் பின்புறம் ரத்த காயங்களுடன் அக்னிராஜ் இறந்து கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த நிஜாமுதீன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அக்னிராஜும், நிஜாமுதீனும் இணைந்து மது கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது அக்னிராஜ் நிஜாமுதீனின் செல்போனை பறித்துக்கொண்டு தர மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நிஜாமுதீன் அக்னிராஜின் தலையில் கல்லால் தாக்கியதோடு, அருகில் கிடந்த பொருட்களை அவர் மீது போட்டு தீ வைத்துள்ளார். இதனால் அக்னி ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.