காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேலை கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீனா தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்ததை அறிந்த அவரது பெற்றோர் தீனாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தீனா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன்பின் வெளியே சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தீனாவை தேடி பார்த்துள்ளனர்.
இதற்கிடையில் சேலை பகுதியில் இருக்கும் ஒரு சிவன் கோவில் பக்கத்தில் விஷம் குடித்து தீனா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை தேடி சென்ற மாரி தனது மகன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.