மலைத் தேனீக்கள் கொட்டியதால் முதியவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் செங்குளம் பகுதியில் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூட சுவரில் மலைத் தேனீ கூடு கட்டி இருப்பதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்துள்ளனர். அப்போது சிறுவர்கள் தேன்கூட்டில் கற்களைத் தூக்கி எறிந்தனர். இதனால் தேன்கூடு கலைந்து வெளியேறிய தேனீக்கள் சிறுவர்களை நோக்கி வேகமாக பறந்து வந்தது. இதனை பார்த்ததும் சிறுவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த சிலரை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியது.
இதில் செங்குளம் பகுதியை சேர்ந்த முத்து என்பவரை தேனீக்கள் சூழ்ந்து கொட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டார். மேலும் மலைத் தேனீக்கள் கொட்டியதால் குருவம்மாள், கனிமொழி, பேச்சியம்மாள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.