Categories
மாநில செய்திகள்

தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்!

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் மார்ச் 6 முதல் 13 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுத்தீஷ் நேற்று சந்தித்தார்.

அடையாரில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது மாநிலங்களவை எம்பி பதவி குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தேமுதிகவுக்கு எம்பி பதவி தருவதாக அதிமுக ஒப்பந்தம் ஏதும் செய்யவில்லை. பாமகவுக்கு மட்டுமே எம்பி பதவி தருவதாக அப்போது அதிமுக ஒப்பந்தம் செய்தது என தெரிவித்தார்.

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவது தொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும், இது கட்சியின் கொள்கை முடிவு, தனி நபர் முடிவு அல்ல என அவர் கூறியுள்ளார். மேலும் ரஜினி-கமல் இணைந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது, அவர்கள் கூட்டணி குறித்து திமுக தான் கவலைப்பட வேண்டும், அதிமுகவுக்கு கவலை இல்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |