சேலத்தில் , வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு தொகுதியில் , திமுக சார்பில் போட்டியிட மனு அளித்த வேளாண்துறையில் பணியாற்றி வந்த பெண் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் ,தலைவாசல் பகுதியில் வேளாண் உதவி தொழில்நுட்ப மேலாளர் பதவியில் திலகவதி என்பவர் தற்காலிகமாக பணியாற்றி வந்தார். பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த திலகவதி, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் ஏற்காடு தொகுதியில் போட்டியிடுவதற்கான மனுவை ,சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில், இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின.இது பற்றிய பேச்சானது அரசு ஊழியர்களிடையே பரவலாக காணப்பட்டது.
இந்த தகவலை பற்றி மாவட்ட ஆட்சியரான ராமனிடம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக திலகவதி தேர்தலில் போட்டியிட மனு அளித்துள்ளாரா ? என்று விசாரணை நடத்தியதில், அவர் மனு அளித்தது உண்மை என்று தெரிந்தது. இதன் காரணமாக அந்த பெண் ஊழியரை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது , அரசு பணியாளர்கள் தேர்தலில் போட்டியிடுவது ,தேர்தல் விதிமுறைக்கு எதிரான செயல் ஆகும். இதனால் திலகவதி பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்று கூறினர்.