ராமநாதபுர மாவட்டத்தில் குறும்படங்கள் மூலமாக,தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்குமாறு ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேசமயம் பொதுமக்கள் தேர்தலில் ,100 சதவீதம் வாக்குப்பதிவு அளிப்பதை ஊக்குவிக்கும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன்படி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ,வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு குறும்படங்கள் வாகனத்தின் மூலமாக பெரிய திரையில் திரையிடப்பட்டு ,மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
‘அனைத்து தரப்பு வாக்காளர்கள்’ , ‘வாக்களிப்பதன் உரிமை’, ‘தங்கள் ஓட்டிற்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ போன்ற பல்வேறு தலைப்புகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியரான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டார். அதன்பின் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு பற்றிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார்கள் ,நகராட்சி ஆணையர் ,அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .