அமெரிக்காவில் அதிபர் தேர்தலை தள்ளிப்போட விருப்பமில்லை ஆனால் நியாயமாக நடத்த வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலானது வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் தேர்தல் களமானது தற்போது சூடு பிடித்திருக்கிறது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடனும், குடியரசு கட்சியினர் சார்பில் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடவுள்ளனர். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று அமெரிக்காவில் மிகவும் தீவிரமடைந்து இருப்பதால், அந்நாட்டில் தேர்தல் நடத்துவதில் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக வயதானவர்களால் நேரில் வந்து வாக்களிக்க இயலாது. அதனால் அவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தபால் வாக்கு முறை மூலமாக பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு தேர்தல் முடிவுகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதனால் தேர்தலை ஒத்தி வைக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதிபரின் இத்தகைய கருத்து மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதால், டிரம்ப் அதிலிருந்து பின் வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “தேர்தலை ஒத்தி வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் வாக்கு செலுத்திய நாளன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெற வேண்டும் என்பதே எனது கருத்து.இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு முறைகேடுகள் ஏற்பட்டு நியாயமான தேர்தல் முடிவுகள் வெளி வராது” என்று கூறியுள்ளார்.