சிவகங்கை கல்லல் பகுதியில் அ.தி.மு.க. பிரமுகரின் வீட்டில் சோதனையின்போது ரூ.70,000 பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் உள்ள ஆளவந்தான்பட்டியில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தவல்லி என்ற மனைவி உள்ளார். நாகராஜன் செவரக்கோட்டை ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அ.தி.மு.க. பிரமுகர். தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக இவருடைய வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது.
அந்த புகாரின் பேரில் சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் பறக்கும் படை அதிகாரி காளிமுத்து தலைமையில் காரைக்குடி வருமானவரித்துறை ஆய்வாளர் நிகில்குமார், பெருமாள் ஆகியோருடன் இணைத்து ஆனந்தவல்லி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். மேலும் வீட்டில் உள்ளவர்களை வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தவல்லி, ஊராட்சி மன்ற செயலர் நாகராஜன் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே அவர்களது வீட்டிற்கு வெளியில் ரூ.70 ஆயிரத்து 600 பணம் கிடந்துள்ளது.
இந்த பணம் குறித்து அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் அதற்கு சரியான பதில் கூறவில்லை. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை சிவகங்கை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பதுக்கப்பட்ட பணமா ? அதிகாரிகள் வருவதை அறிந்து கொண்டு வீட்டிலிருந்து வெளியில் பணம் வீசப்பட்டதா ? என்று பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.