நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில் இருந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் திமுக நிர்வாகி ஆபே மணி கொடூரமாக கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை மடிப்பாக்கத்தில் அதிமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டார். மேலும் தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் அடிதடி தாக்குதல் என பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் ஓட்டுப்பதிவு நாளிலும் நீடித்தது. இதனை தொடர்ந்து கள்ள ஓட்டு போட முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து ஓட்டுப்பதிவு இயந்திரம் உடைப்பு எம்.எல்.ஏக்கள் கார் கண்ணாடி உடைப்பு என வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதனால் மாநிலத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இதன்காரணமாக கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், ரோந்து பணியில் தவறுகள் இருக்கக்கூடாது என்றும், விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மேலும் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்த புகார்கள் தாமதமாக விசாரிக்கபடுகின்றன பல காவல் நிலையங்களில் புகார் பெறப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இக்காரணங்களால் டி.ஜி.பி பிறப்பித்துள்ள உத்தரவில் “தேர்தல் தொடர்பாக தரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கும். தேர்தல் தொடர்பாக மட்டுமல்ல மக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். அதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணுங்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.