Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் நேரத்தில் உருவான திடீர் கட்சிகளின் வரலாறு…!!

தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல,  திடீர்  சாம்பார் போல,  திடீர் விருந்தாளி போல,  திடீர் மழை போல,  திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது.

சில திடீர் கட்சிகள் தேர்தல் முடிந்தவுடன் காணாமல் போயிருக்கிறது, சில கட்சிகள் ஓரிரு தேர்தலுக்கு  தாக்குப்பிடித்திருக்கிறது. சில முக்கிய கட்சிகளாக திடீர் கட்சிகளாக  மாறி திருப்பத்தை ஏற்படுத்தும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன. அப்படி தேர்தல் நேரத்தில் உருவாக்கின திடீர் கட்சிகளைப் பற்றி….  அக்கட்சிகள் தமிழ்நாடு அரசியல் களத்திலும், தேர்தல் களத்திலும் ஏற்படுத்திய  திருப்பங்களையும், தாக்கங்களையும்  இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.

முதல் பொது தேர்தலில் ஆட்சியை தீர்மானித்த திடீர் கட்சிகள்: 

சுதந்திரத்திற்குப் பிறகான முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் எதையாவது செய்து ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் இறங்கினர். அந்த முயற்சிகள் ஒரு கட்டத்தில் வெற்றி பெற்றன. அதற்கு முக்கியமான காரணம் மாணிக்கவேல் நாயக்கரின்  காமன்வீல் கட்சியும்,  விழுப்புரம் ராமசாமி படையாட்சியாரின் உழைப்பாளர் கட்சியும் தான். இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம்…. அந்த இரண்டு கட்சிகளும் தேர்தல் நெருக்கத்தில் உருவான கட்சிகளே….

காமன்வீல் கட்சி – உழைப்பாளர் கட்சி:

காங்கிரசின் கட்சியின் செல்வாக்கு நிரம்பிய தலைவர்களாக இருந்த மாணிக்கவேல் நாயக்கரும், ராமசாமி படையாட்சியாரும் அதிருப்தி காரணமாக தனித் தனிக் கட்சிகளை தொடங்கி வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் காங்கிரசுக்கு  எதிராக களத்தில் நின்றனர். அந்த கட்சிகளுக்கு  புதிதாக உருவாகி இருந்த அண்ணா தலைமையிலான திமுக ஆதரவு அளித்தது. ஏராளமான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிகளை காமன்வீல் கட்சி மற்றும் உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள் கபளீகரம் செய்திருந்தனர். குறிப்பாக ராமசாமி படையாட்சியாரின்  தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சார்பில் 19 பேரும், மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி சார்பில் 6 பேரும் வெற்றி பெற்றிருந்தனர்.

தொங்கு சட்டமன்றம்:

இன்னொரு வியப்பு தமிழ்நாடு உழைப்பாளர் கட்சிக்கு நான்கு எம்பிகளும், காமன்வீல் கட்சிக்கு 3 எம்பிக்களும் கிடைத்திருந்தன. அந்த அளவுக்கு இரண்டு கட்சிகளும் தேர்தல் களத்தில் தாக்கம் செலுத்தியதால் தான் இந்தியா முழுதும் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது காங்கிரஸ் கட்சியால் சென்னை மாகாணத்தில் மட்டும் பெரும்பான்மை பெற முடியவில்லை.தொங்கு சட்டமன்றம் அமைந்ததால் மைனாரிட்டி அரசு அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் காங்கிரசுக்கு உருவானது. அப்போது மைனாரிட்டியை மெஜாரிட்டியாக மாற்ற காமன்வீல்  கட்சியையும், உழைப்பாளர் கட்சியையும் தங்கள் பக்கம் இழுத்துதார் ராஜாஜி.

முதல்வரை தீர்மானித்த திடீர் கட்சிகள்:

காங்கிரசை எதிர்த்து கணிசமான இடங்களில் வெற்றி பெற்ற அந்த இரண்டு கட்சிகளும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு ராஜாஜிக்கு உதவி செய்தன. அந்த இரண்டு கட்சிகளில் மாணிக்கவேல் நாயக்கரின் கட்சி காங்கிரஸில் இணைந்து விட்டது. அதற்கான பரிசாக  ராஜாஜியின் அமைச்சரவையில் மாணிக்கவேலுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.பிறகு ராஜாஜிக்கு பதிலாக காமராஜர்  முதல்வரான போது அவரது  அமைச்சரவையில் இடம்பெற்றார் ராமசாமியார். இப்படி சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலுக்கு முன் திடீரென உருவான இரண்டு கட்சிகள் தான் முதலில் ராஜாஜியும், அடுத்து காமராஜரையும் முதல்வர் ஆக்கின என்பதுதான் தேர்தல் வரலாறு.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆதரவு:

பின்னர் 1957 ஆம் ஆண்டு தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸிலிருந்து பிரிந்து காங்கிரஸ் சீர்திருத்தம் கமிட்டி என்ற பெயரில் தனிக்கட்சி ஒன்று உருவானது. காமராஜருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயராம ரெட்டியார், வெங்கட் கிருஷ்ணா ரெட்டியார், சட்டநாதர் கரையாளர் போன்றோரால் உருவாக்கப்பட்ட அந்த கட்சிக்கு ராஜாஜி,  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் போன்றோரின் ஆசியும் – ஆதரவும் இருந்தன. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்று ராஜாஜி பிரச்சாரம் செய்த 1957ஆம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரஸ் சீர்திருத்த கமிட்டி 16 இடங்களிலும் பிடித்து, சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியானது.

திமுக வாய்ப்பை பறித்த திடீர் கட்சிகள்:

உண்மையில் திமுக தான் போட்டியிட்ட முதல் பொதுத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும். அந்த வாய்ப்பை தட்டிப்பறித்தது காங்கிரஸ் சீர்திருத்த கமிட்டி. பிறகு அந்தக் கட்சி  நிலைத்து நீடிக்காமல் கலைந்து போனது. அந்த வகையில் முதல் தேர்தல் நெருக்கத்தில் உருவான 2 திடீர் கட்சிகள் முதல்வரையே தீர்மானித்து விட்டு கரைந்து போயின.ஆனால் இரண்டாவது தேர்தல் நெருக்கத்தில் உருவான திடீர் கட்சி பெரிய தாக்கம் எதுவும் செலுத்தாமல் கரைந்து போனது. ஆனாலும் கூட தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகள் உருவாவது நிற்கவில்லை. அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப திடீர் கட்சிகள் உருவாகிக் கொண்டுதான் இருந்தன.

இவேகி சம்பத்;

1962 ஆம் ஆண்டு தேர்தல் நெருக்கத்தில் அண்ணாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும், திராவிட நாடு கோரிக்கை சித்தாந்த சிக்கல் காரணமாகவும் திமுகவிலிருந்து பிரிந்து தமிழ் தேசியக் கட்சி என்ற தனி பெயரில் தனி கட்சியை உருவாக்கினார் இவேகி சம்பத். அவருக்கு துணையாக கண்ணதாசன், பழ. நெடுமாறன் போன்றவர்கள் இருந்தார்கள். அப்போது நடந்த தேர்தலில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட தமிழ் தேசிய கட்சி படுதோல்வி அடைந்தது.

தமிழ் தேசியக் கட்சி:

தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இவேகி சம்பத் மூன்றாமிடம் பெற்றார். கருணாநிதி  வெறுப்பும், அண்ணா எதிர்ப்பும், திமுக எதிர்ப்பு என்று இயங்கிய இவேகி சம்பத்தின் தமிழ் தேசிய கட்சி மெல்ல காங்கிரஸ் ஆதரவு சக்தியாக மாறியது. ஒரு கட்டத்தில் காமராஜர் விடுத்த அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கட்சியை காங்கிரசில் இணைத்தார் இவேகி சம்பத். அந்த வகையில் தேர்தல் நேரத்தில் திடீரென உருவாகி, எந்த தாக்கத்தையும் செலுத்தாத கட்சி பட்டியலில் இவேகி சம்பத்தின் தமிழ் தேசிய கட்சி இடம் பெற்றது.

நமது கழகம்:

1980களின் மத்தியில் உருவான திடீர் கட்சிகளில்”நமது கழகம்” முக்கியமானது. எம்ஜிஆருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுகவிலிருந்து பிரிந்து ”நமது கழகம்” என்ற கட்சியை தொடங்கினார் எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்ற எஸ்.டி சோமசுந்தரம். 1984 ஆம் ஆண்டு தேர்தலின் போது முதலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பி, அந்த முயற்சி வெற்றி பெறாததால் 30க்கு மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தினார் எஸ்.டி.எஸ். ஆனால் அந்த தேர்தலில் நமது கழகம் படுதோல்வியைச் சந்தித்த, பின்னர் அதிமுகவில் இணைந்து விட்டார் என்று சோமசுந்தரம். அந்த வகையில் தேர்தல் களத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மறைந்துபோன கட்சி எஸ்.டி.எஸ்சின் ”நமது கழகம்”.

எம்ஜிஆர் எஸ்.எஸ்.ஆர் புரட்சி கழகம்:

எம்ஜிஆர் அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சூழலில் நடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த நடிகர் எஸ்.எஸ் ராஜேந்திரன் அதிமுகவிலிருந்து விலகி எம்ஜிஆர் எஸ்.எஸ்.ஆர் புரட்சி கழகம் என்ற தனி கட்சியைத் தொடங்கி சேடபட்டியில் போட்டியிட்டார். ஆனால் தேர்தலின் முடிவில் எஸ்.எஸ்.ஆருக்கு தோல்வியே மிஞ்சியது. அந்த தேர்தலோடு எஸ்.எஸ்.ஆர் கட்சி தனது பயணத்தை முடித்துக்கொண்டது.

தமிழக முன்னேற்ற முன்னணி:

எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரு கூறுகளாகப் பிளவு பட்டு இருந்தது. அப்போது ஜானகி எம்ஜிஆர் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று  என்ற கோரிக்கை எழுப்பினார் காங்கிரசின் முன்னணி தலைவராக இருந்த சிவாஜி. அதற்கு ராஜீவ் காந்தி மறுக்கவே, அதிர்ச்சி அடைந்த சிவாஜி ”தமிழக முன்னேற்ற முன்னணி’‘ என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் நடந்த தேர்தலில் அதிமுக ஜானகி பிரிவுடன் –  சிவாஜி கூட்டணி அமைத்தார்.

நடிகர் பாக்கியராஜ் கட்சி:

சோகம் என்னவென்றால் அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு தனது சொந்த தொகுதியான திருவையாறிலும் தோற்றுப் போனார் சிவாஜி.கிட்டதட்ட இதே சமயத்தில் என் கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்ட இயக்குனர் பாக்யராஜ் தனது ஆதரவாளர்களோடு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் தேர்தலில் போட்டியிடமலே கட்சியை கலைத்து விட்டார் பாக்கியராஜ்.

அதிமுக ஜே  VS அதிமுக ஜா:

இங்கே இன்னொரு செய்தியையும் குறிப்பிட்டாக வேண்டும். எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜே  VS அதிமுக ஜா என்ற இரண்டு கட்சிகள் உருவாக்கி 1989ஆம் ஆண்டு தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பிறகு இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைந்து விட்டன.

ராமதாஸ்:

தேர்தல் நெருக்கத்தில் உருவான கட்சிகளில் முக்கியமானது டாக்டர் ராமதாஸ் தலைமையில் உருவான பாட்டாளி மக்கள் கட்சி. உண்மையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இயங்கிய வன்னியர் சங்கம்…. வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தது .ஆனால் அதை மாநிலத்தில் இருந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசோ, ஜானகி தலைமையிலான அதிமுக அரசோ அல்லது மத்தியில் இருந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசோ ஏற்கவில்லை.

பாமக:

அதிருப்தி அடைந்த டாக்டர் ராமதாஸ் 1989 ஆம் ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வன்னியர் சங்கம் புறக்கணிக்கும் என்று அறிவித்தார். பிறகு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வன்னியர்களின் கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் கருணாநிதி, வன்னியர் உள்ளிட்ட பிரிவினருக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.ஆனால் அந்த அறிவிப்பை ஏற்க மறுத்த டாக்டர் ராமதாஸ், 1989ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

15லட்சம் வாக்குகள்:

முதலில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று அதிமுகவுக்கும், திமுகவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பாமக, 1989 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்கியது. பெரிய கட்சிகள் எதனுடனும் கூட்டணி அமைக்காமல், தனித்து களமிறங்கிய பாமக, 1989 ஆண்டு மக்களவைத் தேர்தலில் சுமார் 15 லட்சம் வாக்குகளைப் பெற்று வடமாவட்டங்களில் தனது பலத்தை நிரூபித்துக் காட்டியது. முதலில் சிறிய கட்சிகளுடனும், பிறகு திமுக – அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, வெற்றி தோல்விகளை சந்தித்தது பாமக.

பாமக கூட்டணியே வெற்றி:

ஒரு கட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக இடம்பெறும் கூட்டணியே  வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பாமகவுக்கு என்று தனிப் பிரதிநிதித்துவம் கிடைத்து. மத்திய அமைச்சரவையில்  பாமகவினர் இடம்பெறும் அளவுக்கு பாமக வளர்ச்சி அடைந்தது. பிறகு ஏற்பட்ட அரசியல் காட்சி மாற்றங்கள் காரணமாக 2016ஆம் ஆண்டு தேர்தலில் டாக்டர் அன்புமணி ராமதாஸ்ஸை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து, தமிழகம் முழுக்க தனித்துப் போட்டியிட்டது பாமக.

பிரதான கட்சியான பாமக:

திமுகவும் – அதிமுகவும் பலமாக இருந்த நிலையில், கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில், தனித்துப் போட்டி என்று பாமக எடுத்த முடிவு மிக முக்கியமானது. ஆனால் அந்தத் தேர்தலில் பாமகவுக்கு தோல்வியே மிஞ்சியது. முதலமைச்சர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி தோற்றுப்போனார். என்றாலும் பாமகவுக்கு செல்வாக்கு தேர்தல் அரசியல் களத்தில் இருக்கவே செய்கிறது. 2019 ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பிரதான கட்சியாக பாமக இடம்பெற்றது.

அதிமுகவுடன் கூட்டணி:

அதே போல 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமகவை தக்க வைக்கும் முயற்சியில் அதிமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டனர். முக்கியமாக வன்னியர்களுக்கு  இட ஒதுக்கீடு கோரிக்கையை முன்னெடுத்து வந்தது பாமக. இதன் விளைவாக வன்னியர்களுக்கு 10சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்த அதிமுக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தது. அந்த வகையில் தேர்தல் நெருக்கத்தில் திடீரென உருவாகி தொடர்ந்து அரசியல் களத்தில் முக்கியத்துவத்துடன் இயங்கிவரும் அரசியல் கட்சிகளுள் பாமக குறிப்பிடத்தக்கது.

அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்ற கழகம்:

எஸ்.டி சோமசுந்தரம், எஸ்எஸ் ராஜேந்திரன் போல முன்னாள் அமைச்சர்  திருநாவுக்கரசும் அதிமுகவிலிருந்து விலகி இரண்டு முறை தனிக்கட்சி தொடங்கி இருக்கிறார். 1990களின் தொடக்கத்தில் அண்ணா புரட்சித்தலைவர் தமிழக முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்த திருநாவுக்கரசு, 1991 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதிகளை கைப்பற்றி இருந்தார். அப்போது திருநாவுக்கரசும், சாத்தூர் ராமச்சந்திரனும் திருநாவுக்கரசின் கட்சி சார்பில் வெற்றி பெற்றனர். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட சமரசத்தினால் அதிமுகவிலே இணைந்து விட்டார் திருநாவுக்கரசு.

திருநாவுக்கரசு,  சு.திருநாவுக்கரசராக மாறினார்:

அதனால் அவர் முதலில் தொடங்கிய கட்சி அதிமுகவில் கரைந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுகவில் இருந்து வெளியேறிய திருநாவுக்கரசு, அதே நேரத்தில் எம்ஜிஆர் அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கினார். 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து வெற்றிபெற்ற திருநாவுக்கரசு, திடீரென்று தனது பெயரை சு.நாவுக்கரசர் என்று மாற்றிக் கொண்டு தனது கட்சியையும் பாஜகவில் இணைத்துவிட்டு, வாஜ்பாய் அரசில் இணை அமைச்சர் ஆனார். ஆக இரண்டு முறை தனிக்கட்சி தொடங்கி, இரண்டு முறையும் வெற்றி பெற்றவர் திருநாவுக்கரசு என்கின்ற சு.திருநாவுக்கரசர்.

வைகோவின் மதிமுக:

1990களில் உருவான இன்னொரு கட்சி வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திமுக. ஆனால் அது தேர்தல் நெருக்கத்தில் உருவாக்கவில்லை. ஏன் ?  தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ், திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்டவை தேர்தல் நெருக்கத்தில் உருவானவை அல்ல.

மூப்பனார்:

ஆனால் தேர்தல் நெருக்கத்தில் உருவாகி,  முக்கியமான அரசியல் திருப்பத்தை நிகழ்த்திய கட்சிகளுள் ஒன்று மூப்பனார் உருவாக்கிய தமிழ் மாநில காங்கிரஸ். 1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கு தமிழக காங்கிரஸ்ஸில்  பலத்த எதிர்ப்பு. அதனை பிரதமர் நரசிம்மராவ் ஏற்கவில்லை. அதிர்ச்சி அடைந்த மூப்பனார் தமாகா என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.அதே வேகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார், 20 எம்பிகளையும், 39 எம்எல்ஏக்களைவென்றதோடு தமிழக சட்டமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாகவே மாறியது தாமாக.

அசத்திய தாமாக:

அத்தோடு மத்தியில் அமைந்த ஐக்கிய முன்னணி அரசில் தாமாக சார்பில் பா.சிதம்பரம், அருணாச்சலம் உள்ளிட்டோர் அமைச்சர்களாக்கினார்கள். ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைக்க கூடாது என்று கூறி தாமாவை தொடங்கிய அடுத்த ஐந்தே ஆண்டுகளில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, கணிசமான வெற்றியை பெற்றார்.பிறகு மூப்பனார் மரணம் அடையவே 6 ஆண்டுகள் மட்டுமே களத்தில் நீடித்தத தாமாகவை காங்கிரஸில் இணைத்தார் ஜி. கே வாசன். சில ஆண்டுகள் காங்கிரசிலிருந்து மன்மோகன்சிங் அரசில் அமைச்சராக இருந்த ஜிகே வாசன் பிறகு காங்கிரஸிலிருந்து பிரிந்து மீண்டும் தாமாகவை தொடங்கி நடத்தி வருகிறார்.

விஜயகாந்த்:

திமுக – அதிமுக கூட்டணியில் பிரதான கூட்டணிக் கட்சியாக இருந்த தாமாக பிறகு மக்கள் நல கூட்டணியிலும், அதிமுக கூட்டணியிலும் சிறிய பங்குதாரராக தொடர்கிறது.2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைத் தொடங்கினார். கடந்த காலங்களில் தேர்தல் நெருக்கத்தில் உருவான எந்த ஒரு கட்சியும் தமிழகம் தழுவிய அளவிலான கட்சியாக…. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சியாக….. பெரிய கட்சிகளுக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்திக் கொள்ள வில்லை.

தேமுதிக:

அதனை தேமுதிக செய்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு தேமுதிக சார்பில் விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த கட்சிக்கு 8.1/2 சதவீத வாக்குகள் கிடைத்தன. 2009ஆம் ஆண்டு தேர்தலிலும் தனித்தே களம் கண்டது தேமுதிக. பிறகு  கட்சியை உயிரோட்டத்துடன் வைத்திருக்க ஏதுவாக 2011 ஆம் ஆண்டில் அதிமுக அணியில் இணைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்று,  பிறகு 2016ஆம் ஆண்டில் அதிமுக – திமுக இல்லாத அணியில் இடம்பெற்றது  தேமுதிக.

படு தோல்வி:

2016ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் நல கூட்டணியிலும், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றது. ஆனால் அந்த இரண்டு தேர்தல்களில் தேமுதிகவுக்கு படு தோல்வியே மிஞ்சியது. ஆனாலும் கூட 2021 சட்டமன்ற தேர்தலிலும், 2011 போலவே 41 இடங்கள் வேண்டும் என்று அதிமுகவிடம் கோரியது தேமுதிக. அதற்கு காரணம் கட்டமைப்பு ரீதியாக வலுவான கட்சியாக தேமுதிக தொடர்வதுதான்.

பாமக VS தேமுதிக:

அந்த வகையில் பாமக, தேமுதிக தவிர தேர்தல் நெருக்கத்தில் உருவான எந்த ஒரு கட்சியும் தமிழக தேர்தல் களத்தில் பெரிதாக சாதித்துவிடவில்லை,  நிலைத்தும் நின்று விடவில்லை. ஆனாலும் கருத்து வேறுபாடுகளை காரணமாகச் சொல்லி சில கட்சிகள்,  சாதிய பின்புலத்தோடு சில கட்சிகள்,  சினிமா பிரபலத்தை அடித்தளமாகக் கொண்டு சில கட்சிகள்,  மாற்று அரசியலை முன்னிறுத்தி சில கட்சிகள் என்று வெவ்வேறு காரணங்களைச் சொல்லி புதிய புதிய அரசியல் கட்சிகள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

டிடிவி தினகரன்:

டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், நடிகர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் உருவாகின. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் அதிமுக அம்மா அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணிக்கும் உருவாகின. பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு…. அதிமுக அம்மா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனிடையே சிக்கல் முளைக்க… இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே இணக்கம் ஏற்பட்டது. அதன் நீட்சியாக இபிஎஸ் –  ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணையவே, தினகரன் தனித்து செயல்பட தொடங்கினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்:

பிறகு 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஏதுவாக திடீரென  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கி வேட்பாளர்களை நிறுத்தினார். பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்ற போதும், பெரிய அளவிலான வெற்றியையோ,  திருப்பத்தை ஏற்படுத்த வில்லை.ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் சொற்ப வாக்குகளையே அமமுக வேட்பாளர்கள் பெற்றனர். 22 சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தல்களிலும் அமமுகவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம்:

மொத்தத்தில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமமுக கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்தன. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் உருவான திடீர் கட்சிகளில் ஒன்று நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம். திமுக – அதிமுகவுக்கு மாற்றாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தேர்தல் களத்திற்கு வந்த கமல்ஹாசன், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தினார். அவரது கட்சிச்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கபட்டது. அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே சுமார் 4சதவீத வாக்குகளைப் பெற்று வியப்பை ஏற்படுத்தினார்.

திடீர் கட்சிகளின் தொடர் கதை: 

இப்படி தேர்தல் நேரத்தில் உருவான கட்சிகளில் பாமக, தேமுதிக என்ற இரண்டு கட்சிகளும் வெற்றி தோல்விகளை கடந்து தேர்தல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சிக்ளாகவும், புதிதாக உருவான அமமுகவும், மக்கள் நீதி மையமும் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் தொடர்ச்சியாக இயங்கி கொண்டிருக்கின்றன.மாறாக சுதந்திரமடைந்த காலம் தொட்டு தேர்தல் நேரத்தில் உருவான பல கட்சிகள் என்ற ஆவணங்களில் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனாலும் திடீர்  கட்சிகள் முளைப்பது தொடர்கதையாகவே இருக்கும். அது தற்போது தேர்தலிலும் தொடர்கிறது.

Categories

Tech |