பெரம்பலூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், பெரம்பலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வாக்குப்பதிவு நடைபெறும் அன்று 816 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள பணியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த உபகரணங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்களில் 20,400 முகக் கவசங்களும், 6 லட்சத்து 90 ஆயிரத்து 900 பாலித்தீன் கையுறைகளும், 53 ஆயிரத்து 856 சர்ஜிக்கல் முககவசமும், 857 தெர்மல் ஸ்கேனர் கருவிகளும், 26 ஆயிரத்து 928 ரப்பர் கையுறைகள் அலுவலர்களுக்கும், 3,920 கிருமிநாசினி பாட்டில்களும், 11,010 முழு உடல் கவசமும், ஆயிரம் குப்பை தொட்டிகள், 5 வீதம் 4,448 பாலித்தீன் பைகள், 850 அட்டைப் பெட்டிகள் ஆகியவையும் அடங்கும்.
அந்த உபகரணங்களை குன்னம், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி மையம் வீதம் பிரித்து எடுத்து வழங்கப்பட உள்ளது. அதனை பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்திற்கும், பெரம்பலூர் தொகுதி வாக்கு சாவடி மையங்களுக்கும், குன்னம் தாசில்தார் அலுவலகத்திற்கும், குன்னம் தொகுதிக்கும் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை சுகாதார பணியாளர்கள் செய்து வருகின்றனர்.