காரைக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொருத்தவரை திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் சிவகங்கை தொகுதியில் 1,582 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 427 பூத்களுக்கும், திருப்பத்தூர் தொகுதியில் 1,517 எந்திரங்கள், 410 பூத்களுக்கும், காரைக்குடி தொகுதியில் 1,640 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 443 பூத்களுக்கும், மானாமதுரை தொகுதியில் 1,477 எந்திரகள், 399 பூத்களுக்கும் என மொத்தம் 6,216 எந்திரங்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சீல் அகற்றப்பட்டு மீண்டும் எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு மினி சரக்கு வேன், லாரி, வேன் ஆகிய வாகனங்களில் ஏற்றும் பணிகள் நடைபெற்றது. அதன் பின் வாக்குபதிவு மையத்திற்கு வந்தடைந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும் தேவகோட்டை வட்டாட்சியருமான சுரேந்திரன் தலைமையில் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு பதிவு மையங்களுக்கு நகராட்சி அலுவலகத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல் துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பு பொருட்கள் உள்ளிட்டவை வாக்குப்பதிவு இயந்திரத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது.