சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தபால் மூலம் வாக்களிப்பதற்கான படிவங்கள் அச்சிடும் பணி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமராவதிப்புதூரில் உள்ள கூட்டுறவு அச்சகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் அனைத்து மாவட்டங்களிலும் சோதனை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணி ஒருபக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்காளர்களுக்கும், தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதற்காக முன்னேற்பாடு பணி நடைபெற்று வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு படிவங்கள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதிப்புதூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு அச்சகத்தில் தபால் வாக்கிற்கான படிவங்கள் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மதுசூதன் ரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் போது கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கியம் சுகுமார் உடனிருந்தார்.