குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இவற்றில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பிரதமர் மோடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் பிரதமர் அருகில் ஒரு சிறுமி நின்றுக்கொண்டு அம்மாநிலத்தில் பிரதமர் மோடியின் ஆட்சி பற்றி விவரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
இவ்வீடியோ பதிவை மத்திய மந்திரிகளும், பா.ஜனதா தலைவர்களும் பகிர்ந்து வருகின்றனர். எனினும் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் “தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு சிறிய குழந்தையை பிரதமர் பயன்படுத்தி உள்ளார்.
இது அப்பட்டமான ஒரு சட்டமீறல் ஆகும். தேர்தல் கமிஷன் எங்கே..?, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் எங்கே..?” என கேள்வியெழுப்பி இருந்தார். முன்பாக காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையில் குழந்தைகளை ஈடுபடுத்துவதாக பா.ஜனதா கூறி வந்த நிலையில், காங்கிரசின் இக்குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.