திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் நிறைவடைந்தும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. இந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு மற்றும் பணி மாறுதல் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டாரே தவிர பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பையும், பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தப்படும் என்று அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
இதனையடுத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம் கூட்டமைப்பின் சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்றாவது பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் என்று அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகளை இலக்க நேரிடும் என்று அரசு ஊழியர் சங்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.