சிவகங்கை இளையான்குடி அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தனியார் திருமண மஹால் ஒன்று உள்ளது. அந்த மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கண்டனி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன், சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.விற்கு சென்ற பெருமச்சேரி பகுதியில் வசித்துவரும் முருகன், கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த சைமன் ஆகியோர் சென்றனர்.
மேலும் இளையான்குடியில் உள்ள கண்மாய் கரையில் இருந்து திருமண மஹால் வரை பட்டாசுகள் வெடித்துக்கொண்டு இவர்களது ஆதரவாளர்கள் 150 பேர் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் இளையான்குடி-வடக்கு குரூப் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சைமன், முருகன், பாஸ்கரன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.