அரசுத் துறைகளில் குரூப் 2, குரூப் 2-ஏ பணிகளில் 5,529பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையமமான டிஎன்பிஎஸ்சி சார்பாக வருகின்ற 21 ஆம் தேதி முதல் நிலை தகுதி தேர்வு நடைபெறுகிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தேர்வர்கள் தங்களது விபரங்கள் அடங்கியுள்ள பிரத்தியேக விடைத்தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விடைத்தாள் பெற்றதும் அதில் உள்ள தங்களின் விவரங்களை சரிபார்த்த பிறகு பயன்படுத்த வேண்டும்.
தவறாக இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு அதனை மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்வர்கள் அவர்களின் விடைத்தாளுக்கு பதிலாக வேறு விடைத்தாள் பெற்று அதில் தங்களின் பதிவு எண்ணை தவறாக எழுதியிருந்தால் தேரின் மொத்த மதிப்பெண்ணில் இருந்தே இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும். மொத்த கேள்விகளுக்குமான விடைக்குறிப்பை ‘ஷேடிங்’ செய்வதில் சரியான முறையை பின்பற்றாவிட்டால் இரண்டு மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக குறிப்பிடாமலும் விடைத்தாளில் அதற்கான இடத்தில் சரியாக எழுதாமலும் இருந்தாலும் 5 மதிப்பெண் கழிக்கப்படும். ரேகை வைக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் தேவைப்படும் இடத்தில் விரல் ரேகை வைக்க வேண்டும். ரேகை வைக்காவிட்டால் இரண்டு மதிப்பெண் கழிக்கப்படும். எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும். தேர்வர்கள் கவனமாக விடைத்தாளை கையாள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.