ரயிலில் அடிபட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி மேட்டு தெருவில் விஜயகுமார்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ம.தி.மு.க நகர செயலாளர் ஆவார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அஸ்வின் தேர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் அஸ்வின் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாணவனின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அஸ்வின் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற ரயிலில் அடிபட்டு அஸ்வின் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.