தமிழ்நாடு காவல் துறையில் 969 காவல் உதவி ஆய்வாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த மாதம் 12, 13ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் சில மையங்களில் முறைகேடு நடந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர். இதில் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் சிகரம் தொடு பயிற்சி மையம் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
இதுகுறித்து அந்த கடிதத்தில், ”தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் அதனைப் பயன்படுத்தி சிகரம் தொடு பயிற்சி மையம் ஒரே நேரத்தில் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களை விண்ணப்பிக்க வைத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ஒரே தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலுள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட 701 முதல் 707 வரை உள்ள அறைகளில் அதிக மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அங்கிருந்த அனைத்து மாணவர்களும் ஒருவரையொருவர் பார்த்து எழுதினார்கள்.
இத்தேர்வில் சிகரம் தொடு பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இதனை விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.