பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி இன்று காலை முதல் கயாவில் தேர்வர்கள் பயங்கர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கயா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சிலர் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே காவல்துறை கண்காணிப்பாளரான ஆதித்யா குமார், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தின் போது ரயிலுக்கு தீ வைத்த சிலரை தற்போது அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்க அரசு சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் அரசு பொருள்களை சேதப்படுத்துவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். குடியரசு தினமான இன்று தேர்வு எழுதிய இளைஞர்கள் பயணிகள் ரயிலுக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.