பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள வலசு என்னும் கிராமத்தில் நாச்சிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு பயிற்சிக்காக ஓராண்டு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் ரஞ்சித்குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அதிகாலை 4 மணிக்கு அவரது அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது ரஞ்சித் குமார் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி காவல் துறையினர் விரைந்து சென்று ரஞ்சித்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரஞ்சித் குமாருக்கு தேர்வில் அரியர் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் படித்த சக மாணவர்கள் ஜூன் மாதமே பயிற்சியை முடித்ததும், ரஞ்சித்குமார் அரியரை முடிக்காததால் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இவர் தற்போது அரியர் தேர்வுகளை எழுதியுள்ளார். இதனால் ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.