தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக திருவனந்தபுரம், மும்பை, ஹைதராபாத், பெங்களூர், டெல்லி சென்ற நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, நடிகை திரிஷா ஆகியோர் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது. இந்த படம் தமிழ்நாட்டின் பெருமையாகவும் உள்ளது.
பொன்னியின் செல்வன் படம் வெளியாக இருப்பதை நினைத்து பதற்றமாக இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. சோழர்களின் வரலாற்றைடுத்து சொல்லும்போது மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள். தேர்வுக்கு முன்னால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட மனநிலை தான் இப்போது எங்களுக்கு இருக்கிறது. நாம் எல்லோருமே இந்தியர்கள் தான் என்பதை பலரும் தற்போது உணர்கிறார்கள. பல வரலாறுகளை நாம் படிக்கவில்லை. இப்போது படிப்பதற்கு எல்லோரும் ஆர்வமாக உள்ளார்கள். தமிழின் பல நல்ல படங்கள் மற்ற மாநிலங்களில் நன்றாக ஓடுகிறதால் நம்மை மதிக்கின்றனர். மணிரத்தினம், ஏ.ஆர். ரகுமான் ஏற்கனவே இந்தியா முழுவதும் பிரபலமானவர்கள் நமக்கான அடையாளமாக இவர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பேசிய விக்ரம், பொன்னியின் செல்வன் படத்திற்காக பிற மாநிலங்களுக்கு சென்ற போது வரவேற்பு சிறப்பாக இருந்தது. நாம் நமது சோழர்களின் பெருமையை சொல்லும் போது மற்ற மாநிலத்தவர்களும் சோழர்கலை கொண்டாட தொடங்கிவிட்டனர். இந்த படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.