Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி…. கைக்குழந்தையுடன் கல்லூரி மாணவி தர்ணா…பரபரப்பு….!!!!

தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி கைக்குழந்தையுடன் மாணவி கல்லூரி முன் தர்ணா போராட்டம் நடத்தினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை அடுத்துள்ள ஆயுதம் கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணனின் மகள் 20 வயதுடைய காமாட்சி. இவர் வாலாஜாபேட்டையில் இருக்கின்ற அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ் படித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் வருடம் படிக்கின்ற போது இவருக்கும் தேவஅன்பு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் காமாட்சிக்கு குழந்தை பிறந்த நிலையில் தனது கல்லூரிப் படிப்பை தொடர வேண்டும் என்று நினைத்து காமாட்சி குழந்தை பிறந்த ஒரு மாதத்தில் கல்லூரிக்கு வந்துள்ளார்.

இதை பார்த்த பேராசிரியர் பச்சிளம் குழந்தையை கல்லூரிக்கு கொண்டு வரக்கூடாது என்று அறிவித்து விடுப்பு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் காமாட்சி விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் இறுதி வருடம் தேர்வை எழுத காமாட்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பணம் கட்டினார். இறுதி வருடம் தேர்விற்கு முந்தைய திருப்புதல் தேர்வில் அவரை அனுமதிக்கவில்லை. அதோடு மட்டுமல்லாது வருகை பதிவேட்டில் குறைவான தினங்களை அவர் கல்லூரிக்கு வந்ததால் பதிவாளர் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை.

மேலும் இரண்டு மாதங்களுக்கு முன் செலுத்திய கட்டணத் தொகையையும் கல்வி நிர்வாகம் திருப்பி வழங்கியுள்ளது. இதனால் கோபமடைந்த காமாட்சி தனது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தன்னை இறுதி வருட தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கோரி தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதனையடுத்து காமாட்சியை பேராசிரியர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் காமாட்சி அதற்கு உடன்படாததால் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே காவல்துறையினர் அங்கு வந்து மாணவியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்தனர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டுவிட்டு குழந்தையுடன் காமாட்சி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

Categories

Tech |