அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது “30 வயதுக்கு உட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க, வாக்குறுதியை நிறைவேற்றாததோடு கல்லூரி மாணாக்கர்களின் தேர்வுக் கட்டணங்களை 2 , 3 மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று இருக்கிறது. இதனிடையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 147 இணைப்புக் கல்லூரிகளில் கட்டணங்கள் 2, 3 மடங்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் போராட்டம் மேற்கொள்வதாகவும் செய்தி வெளியாகிறது. ஆனால் அரசு இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.
ஆகவே பாரதிதாசன் பல்கலையில் தொடர்ந்து பழைய கட்டணம் வசூலிக்கவும், பிற பல்கலைக்கழகங்களும் கட்டணஉயர்வை அறிவிக்காமல் இருக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் அவர்கள் மாணவர்களின் ஏழ்மை நிலையை கருத்தில்கொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உட்பட அனைத்து கட்டண உயர்வையும் ரத்து செய்யவேண்டும் என்றும் வருங்காலங்களில் பல்கலைக்கழகங்களில் கட்டண உயர்வு அறிவிப்பு இருக்கக்கூடாது என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
30 வயதிற்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள திமுக,
வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, கல்லூரி மாணாக்கர்களின் தேர்வுக் கட்டணங்களை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்த வழிவகை செய்துள்ளது கண்டனத்திற்குரியது. pic.twitter.com/agXfR2NqAP
— O Panneerselvam (@OfficeOfOPS) April 10, 2022