தமிழகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் சி. பூரணசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஆர்பி தேர்வுக்கான பணிகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் சில கல்லூரி முதல்வர்கள் பேராசிரியர்களை விட மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் தேர்வு வாரியத்திற்கான பணிகள் நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிஆர்பி தேர்வு வாரியத்தின் பணிகளை மேற்கொள்ள பேராசிரியர்களை விடுவிக்க மறுக்கும் முதல்வர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.