Categories
மாநில செய்திகள்

தேர் விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி..!!

தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்..

இதற்கிடையே உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

அதேபோல மத்திய அரசு சார்பில் தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்த 14 பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக அதிமுக சார்பில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவியும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 15 பேரின் குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |