ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் 40 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் உள்ள பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மனோகரன் நேற்று இரவு புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பிரார்த்தனையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
வீட்டினுள்ளே பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்துள்ளது. மேலும் பீரோவில் உள்ள கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றதை அறிந்த மனோகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் புத்தாண்டு கொண்டாடுவதற்காக அவர் குடும்பத்துடன் தேவாலயத்திற்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இந்நிலையில் ஏற்கனவே கிறிஸ்துமஸ் தினத்தன்று இதே தெருவில் ஒரு வீட்டில் மர்ம நபர்கள் திருட முயன்றதும் இந்த விசாரணையில் தெரிய வந்தது. தற்போது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.