உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழ்நாட்டிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியே வர கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உத்தரவை மதிக்காமல் கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாத சிலர் இன்னும் சாலையில் சுற்றி வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களுக்கு காவல்துறையினர் நூதனமாக தண்டனைகளை வழங்குகின்றனர். இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி தேவையின்றி வெளியே வருவோரின் இருசக்கர வாகனம் நாளை பறிமுதல் செய்யப்படும் என கடலூரில் அமைச்சர் சம்பத் அதிரடி அறிவித்துள்ளார். கொரோனா மிக கொடியது என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.