தையல் எந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள ஆலாம்பாளையம் கோரக்காட்டுபள்ளம் பகுதியில் வசித்து வரும் சிவக்குமார் என்பவற்றின் மூத்த மகள் ராஜதுர்கா(22). பி.ஏ. பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராஜதுர்கா மற்றும் அவரது தாயார் அப்பகுதியில் உள்ள வசந்தி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் பேசிகொண்டிருக்கும்போது அங்கிருந்த மின்சாரத்தால் இயங்கக்கூடிய தையல் ஏந்திரத்தின் மீது ராஜதுர்கா கைது வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தையல் எந்திரத்தில் இருந்து திடீரென ராஜதுர்கா மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜதுர்கா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பள்ளிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மகளின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.