தைவானின் ஜனநாயக பாதுகாப்பில் அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும் என நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.
சீனா நாட்டிலிருந்து பிரிந்து சென்ற தைவான். தனது சொந்த அரசியலமைப்பு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆகியவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கின்றது. ஆனால் சீனாவோ தைவானை தனது கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பகுதி என்று கூறி வருகின்றது. ஆனால், தைவானுக்கும், அதன் நிலைப்பாட்டுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆவார். இவருடைய வயது 82 ஆகிறது. தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தில் தைவானை சேர்த்துக்கொண்டார். அவர் தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சீனா எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளது. நான்சி பெலோசி தைவானுக்கு சென்றால், அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது. ஆனால் சீனாவின் எதிர்ப்பை புறக்கணித்துவிட்டு நான்சி பெலோசியின் தைவான் பயணம் உறுதியானது. இதனால் உலக அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் 13 போர் விமானங்கள், ஜப்பானில் உள்ள அமெரிக்க படைத்தளங்களிலிருந்து புறப்பட்டன. இந்த விமானங்கள், நான்சி பெலோசியின் தைவான் பயணத்தின்போது அவரது விமானத்துக்கு பாதுகாப்பாக அணிவகுத்து செல்லும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நான்சி பெலோசி நேற்று மலேசியா சென்றார். அந்நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து அவரது விமானம் சி-40பி தைவானுக்கு புறப்பட்டுள்ளது.
நான்சி பெலோசியின் விமானம் தைவானுக்குள் சென்றதும் புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவரது விமானத்துக்கு தைவான் போர் விமானங்கள் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வானில் வலம் வந்தது. மற்றொரு புறம் சீனாவின் 4 போர் விமானங்கள் தைவான் வான் வெளியில் நுழைந்துள்ளன. இத்தனை பரபரப்பு, பதற்றத்துக்கு இடையில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகரான தைபேயில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.42 மணிக்கு (இந்திய நேரபடி நேற்று இரவு 8.12 மணி) அளவில் தரை இறங்கியது. இதனால் அடுத்தடுத்து என்ன என்ற பரபரப்பு உலக அரங்கில் நிலவுகின்றது. இந்த சூழ்நிலையில் பெலோசியின் பயணம் ஒரே சீனா என்ற கொள்கையை அத்துமீறிய தீவிர செயல் என கூறியுள்ள சீனா, தைவான் நாடு மீது வர்த்தக தடைகளை விதித்துள்ளது. தைவான் ஜலசந்தி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரதன்மையை குழித்தோண்டி புதைக்கும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளதுடன், தைவான் சுதந்திரத்திற்கான பிரிவினைவாத சக்திகளுக்கு, ஒரு தீவிர தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
தைபேயில் சென்று இறங்கிய பின்பு பெலோசி கூறியதாவது, “தைவானின் ஜனநாயகத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது நாடு உறுதியான ஈடுபாட்டுடன் இருக்கின்றது என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். சுயாட்சி செய்யும் தைவான் தீவின் மீது, அமெரிக்கா நீண்ட காலம் கொண்டுள்ள கொள்கையில் தனது பயணம், எந்தவிதத்திலும் முரண்படாது என்றும் அவர் கூறியுள்ளார். இதன் பின்பு தைவான் நாட்டு அதிபர் சைஇங்-வென்னை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் தைவான் வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது. சவால்களை சந்தித்த போதிலும், அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்ப உலகிற்கு நிரூபித்துள்ளது என கூறியுள்ளார். இதுவரை இல்லாத வகையில், தைவானுடன் அமெரிக்கா நல்லிணக்கத்துடன் இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செய்தியை நாங்கள் இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம் என கூறியுள்ளார். இங்கு ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை உலகம் இன்று எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தைவான் மற்றும் உலக நாடுகளில் ஜனநாயக பாதுகாப்பு பற்றிய அமெரிக்காவின் தீர்மானம் தொடர்ந்து இரும்பு கவசம் போல் இருக்கும்” என அவர் கூறயுள்ளார். மேலும் இதனால், சீனா கொள்கைக்கு எதிராக மற்றும் சீன-அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.