கடந்த 1949ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் தனி நாடாக மாறியது. இருப்பினும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று சீனா கூறி வருகிறது. அதேசமயம் அமெரிக்கா, தீவு நாடான தைவானுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை அதிக அளவில் வழங்கி வருகிறது.
இதற்கிடையே ரஷ்யா, உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலை போலவே சீனாவும் தைவான் மீது படையெடுத்து தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக தென் சீன கடல் பரப்பில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் திடீரென அமெரிக்க எம்.பி.க்கள் குழு இன்று தைவான் நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். அதாவது தைவானுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் 6 பேர் சென்றுள்ளனர். இந்த குழு தைவான் பாதுகாப்புத்துறை மந்திரி மற்றும் அதிபரை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.