பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதி மீறல் என குற்றம் சாட்டப்பட்டு தொடக்க கூட்டுறவு வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் விதிமீறல்கள் நடந்திருப்பதாக வங்கி செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஓய்வுபெறும் நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.
இப்போராட்டத்தில் 900 பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதனிடையே அடுத்த போராட்டம் குறித்து கூட்டம் நடந்ததில் பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை தாங்க செயலாளர், பொறுப்பாளர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.
இதையடுத்து பேட்டியில் பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் கூறியுள்ளதாவது, பயிர் கடன் தள்ளுபடியில் குற்றம் சாட்டப்பட்டு நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 தொடக்க கூட்டுறவு வங்கி சங்க செயலாளர்கள் மீது பணி ஓய்வு பெறும் நாளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ரத்து செய்யக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டத்தில் 406 கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் 5000 பணியாளர்கள் பணியை புறக்கணித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதுக்கு முடிவு எடுக்கவில்லை என்றால் மாநிலம் முழுவதும் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.