பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது.
மெக்சிகோ நாட்டில் உள்ள டிஜுனா நகரத்தில் மூத்த பத்திரிகையாளரான லூர்து மால்டோநாட் வசித்து வந்தார். இவர் காரில் சென்ற கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளரான லூர்து மால்டோநாட் 3 வருடங்களுக்கு முன்பாகவே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மெக்சிகோ அதிபருக்கு புகார் அளித்துள்ளார். தற்பொழுது அவர் கொலை செய்யப்பட்டது பத்திரிக்கையாளர்களுக்கு இடையே அதீத பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனையடுத்து இந்த கொலை சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தப்படுகிறது என மெக்சிகோ அதிபர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “மெக்சிகோ நாட்டில் கடந்த 21வருடங்களில் 145 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கின்றனர் . இதுகுறித்து தீவிர விசாரணையை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து மெக்சிகோவில் பத்திரிகையாளர்களின் கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள் சங்கம் போராட்டத்தை நடத்தி வருகிறது.