இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு மாதங்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். விலைவாசி அதிகரிப்பு ஒரு புறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மறு புறம் என அந்த நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கொழும்புவிலுள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனிடையில் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தன் குடும்பத்துடன் தப்பி சென்றுவிட்டார். பின் அதிபரின் வீட்டை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்கு இருந்த பொருட்களை எடுத்து சென்றனர். இப்போதுவரை போராட்டக்காரர்கள் அதிபரின் வீட்டிலேயே இருக்கின்றனர். கோத்தபயா தப்பி ஓடிய நிலையில் அவரது வீட்டை ஆக்கிரமித்துள்ள போராட்டக்காரர்கள் அங்குள்ள நீச்சல் குளங்களை பயன்படுத்தினர்.
இதுகுறித்த வீடியோவும் வெளிவந்து வைரலாகியது. இதேபோல் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொண்டும், மதிய உணவு உண்பது உள்ளிட்ட வீடியோக்களும் வெளிவந்தது. இந்த நிலையில் இலங்கை அதிபர் மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள் உபயோகித்ததுபோக மீதம் உள்ள பொருட்கள், குப்பைகள், கழிவு பொருட்கள் போன்றவை மலைபோல் திரண்டது. அதை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஒன்றாக சேர்ந்து திரட்டி மூட்டைகளாக கட்டிவைத்துள்ளனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கூறியதாவது, கழிவு பொருட்களை சுத்தம்செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு எங்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் இது ஒரு பொது இடம் ஆகும். இலங்கையிலுள்ள நடைமுறையை எங்களுடைய தலைமுறை மாற்றவேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு நாங்கள் ஒரு செய்தியை அவருக்கு தெரிவித்து விட்டோம். இதன்பிறகு நாங்கள் இப்போது அமைதியாக இருக்கவேண்டிய தருணம் இது என அவர் கூறியுள்ளார்.