2018ஆம் ஆண்டில் 1,334 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஆறு லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 2019 நவம்பர் 23ஆம் தேதி முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியானது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2 தேர்வில் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் போதே மூன்று கட்டத் தேர்வுகளில் 500க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருப்பது முறைகேடு நடந்திருக்கும் என்கிற சந்தேகத்திற்கு வழி வகுத்தது.
2018ஆம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே பட்டப்படிப்பு முடித்து அதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும் என்பது விதியாகும். 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் பிறந்து பொறியியல் பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களை வைத்திருக்க சாத்தியமில்லை. கலை மற்றும் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் மட்டுமே பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ்களை குறிப்பிட்ட 2018ஆம் ஆண்டில் வைத்து இருக்க வாய்ப்புள்ளது.
தற்போது எழுந்திருக்கும் குற்றச்சாட்டில் 2018ஆம் நடந்த குரூப் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படித்தவர்களாக இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
குரூப் 2 நேர்முகத் தேர்வின் பொழுது 20 வயது நிரம்பியவர்கள் நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது என்பது மிகக் கடினமான ஒன்று. ஏனென்றால் ஐந்து வருடம் போட்டித் தேர்வுக்கு பயிலும் 26, 27 வயது உடையவர்களே நேர்முகத் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெறுவது என்பது கடினமான ஒன்று என்ற கருத்து தேர்வர்கள் மத்தியில் நிலவியது.
இது குறித்து விசாரணை நடத்திய தேர்வாணையம், அவ்வாறு யாரும் தேர்வு எழுதவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் தேர்வு விண்ணப்பம் அறிவிக்கும் நாளில் 21 வயது முடிவடைந்திருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் அல்லது இறுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் அல்லது தற்காலிக பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தேர்வு குறித்து அறிவிப்பு நாளில் சான்றிதழ்கள் வைத்துள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது