தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கடற்கரையொட்டி உள்ள கிராமங்களில் இருந்து புதுக்கடை வழியாக ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு புதுக்கடை போலீசார் புதுக்கடை அருகில் உள்ள வெள்ளையம்பாலம் பகுதியில் தீவிர ரோந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கேரள பதிவு எண் கொண்ட ஒரு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் சிறு சிறு மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் காரையும் 2 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதன் பிறகு அவற்றை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.