கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை கனடா அரசு தடை செய்துள்ளது/
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கனடாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்துள்ளது. இதுகுறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த இரண்டு வாரங்களில் சர்வதேச விமானங்களில் பயணித்தவர்களில் ஒருவருக்காவது பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் 32 விமானங்கள் இந்தியாவில் இருந்து வந்தது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 1.8 சதவீதம் பேர் விமான பயணிகள் என்றும் விமானப் போக்குவரத்தை தடை செய்வதன் மூலம் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.