திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து சிதறியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் உள்ள கிழக்கு பகுதியில் ஏஜியன் என்ற கடல் அமைந்துள்ளது. இந்த கடலில் சமோஸ் தீவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகின்றது. இந்நிலையில் சமோஸ் தீவின் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான எம்.ஐ.8 ரக ஹெலிகாப்டர் ஒன்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் 4 வீரர்கள் இருந்தனர். அப்பொழுது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது.
இதனை தொடர்ந்து மீட்பு படகுகளில் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த கோர விபத்தில் ருமேனியாவை சேர்ந்த ஒருவர், கிரீஸ் நாட்டுக்காரர் ஒருவர் என 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மால்டோவா நாட்டை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர். மேலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.