கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்த காவல்துறையினர் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கம்பம் ஏகலூத்து பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தியுள்ளனர்.
அப்போது காவல்துறையினரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஆகிய 2 இருவர் வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோட முயற்சித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனைதொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த பெண் நெல்லுகுத்தி புளியமரத்தெருவில் வசிக்கும் ஈஸ்வரி என்பது தெரியவந்துள்ளது.
மேலும் தப்பியோடிய நபர் சாமாண்டிபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும், இவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக 1 கிலோ 200 கிராம் காஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் ஈஸ்வரி மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.